தையல் கடையில் பயங்கர தீ விபத்து - மூச்சுத்திணறி 7 பேர் பலி


தையல் கடையில் பயங்கர தீ விபத்து - மூச்சுத்திணறி 7 பேர் பலி
x

தையல் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரின் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள டானா பஜாரில் தையல் கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக பரவியதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் புகையால் மூச்சுத்திணறி பலியாகினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் தீயை வேகமாக அணைத்தனர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடந்த சம்பவம் குறித்து காவல் ஆணையர் மனோஜ் லோஹியா கூறுகையில்," சத்ரபதி சம்பாஜிநகர் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் தையல் கடை மற்றும் பிற வணிக நிறுவனங்களும், மேல் தளத்தில் ஒரு குடும்பத்தினரும் வசித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை தையல் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து 4.15 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட புகையால் 7 பேர் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர்" என்றார்.

அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story