வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோகிங்கியா அகதிகள் கைது


வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோகிங்கியா அகதிகள் கைது
x

வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 7 ரோகிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

லக்னோ,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்ட்டையும் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். குறிப்பாக, மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து போலி அடையாள அட்டை, ஆவணங்களுடன் வசித்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இவ்வாறு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வசித்துவரும் நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், வங்காளதேசத்தில் இருந்து திரிபுரா எல்லை வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பஸ் நிலையம் அடைந்த மியான்மரை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 7 ரோகிங்கியா அகதிகளை உ.பி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரோகிங்கியா அகதிகளிடமிருந்து போலி இந்திய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரோகிங்கியா அகதிகளை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக அழைத்து வந்த புரோக்கரையும் போலீசார் கைது செய்தனர்.

மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் முதலில் வங்காளதேசம் வருகின்றன. அங்குள்ள ரோகிங்கியா அகதிகள் முகாமில் அவர்கள் தங்குகின்றனர். பின்னர் வங்காளதேசத்தில் இருந்து புரோக்கர் உதவியுடன் மேற்குவங்காளம், அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களின் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைகின்றனர்

திரிபுரா எல்லை வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் ரோகிங்கியா அகதிகள் அதன்பின் அங்கிருந்து ரெயில் மூலம் அசாம் மாநிலம் கவுகாத்தி செல்கின்றனர். அங்கிருந்து அகதிகள் தங்களுக்காக தயாரித்த போலி ஆவணங்களின் அடிப்படையில் மேற்குவங்காளம், ஒடிசா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி , பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு சென்று சட்டவிரோதமாக குடியேறுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 4 பெண்கள் உள்பட 7 ரோகிங்கியா அகதிகள் மற்றும் இந்திய புரோக்கர் உள்பட 8 பேரையும் கைது செய்த போலீசார் அனைவரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story