காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 24-ந்தேதி வேட்பு மனு தாக்கல்; அசோக் கெலாட், சசிதரூர் இடையே போட்டி?
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வருகிற 24-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அசோக் கெலாட்டுக்கும், சசி தரூருக்கும் இடையே போட்டி ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
நாட்டின் பழமையான காங்கிரஸ் கட்சிக்கு கடைசியாக 2000-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது தன்னை எதிர்த்து களம் கண்ட ஜிதின் பிரசாதாவை வீழ்த்தி தலைவர் பதவிக்கு சோனியா காந்தி வந்தார். கட்சிக்கு நீண்ட காலம் தலைவர் பதவி வகித்தவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. நடுவில் 2017-19 இடையே தலைவர் பதவியை அவரது மகன் ராகுல் காந்தி வகித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகியதால், சோனியா இடைக்கால தலைவர் ஆனார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 24-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. போட்டி இருந்தால் 17-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தி, 19-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் கெலாட்
மீண்டும் தலைவர் பதவிக்கு ராகுல் காந்திதான் வரவேண்டும் என்று காங்கிரசில் ஒரு பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர் இதுவரை தலைவர் பதவியில் போட்டியிடுவது குறித்து தனது முடிவை அறிவிக்கவில்லை. இந்திய ஒற்றுமை யாத்திரையில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவர் ஒரு வேளை போட்டியிடுவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டால், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் கூட கடைசி நிமிடம் வரை ராகுல் காந்தியை தலைமைப்பதவிக்கு வருமாறு வலியுறுத்துவோம் என கூறி வருகிறார்.
சசி தரூர்
இந்த நிலையில், தலைவர் தேர்தலில் போட்டியிடகேரள மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது அவர் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
சசி தரூர் போன்று பலரும் போட்டியிடுவது வரவேற்புக்குரியது என்ற எண்ணத்தை சோனியா காந்தி வெளிப்படுத்தியது இன்னும் பலர் தலைவர் தேர்தலில் குதிப்பதை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தலைவர் தேர்தலையொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "இந்திய ஒற்றுமை யாத்திரையை வெற்றி பெறச்செய்வதில் ஒட்டுமொத்த கட்சியும் மூழ்கி உள்ளது. இருப்பினும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எந்தவொரு உறுப்பினரும் போட்டியிடுவது வரவேற்புக்குரியது. இது ஜனநாயகம் மற்றும் வெளிப்படையான செயல்முறை. யாரும், யாருடைய அனுமதியையும் பெறத்தேவை இல்லை. குறிப்பாக கட்சித்தலைவரிடம் அனுமதி பெற வேண்டியது இல்லை" என தெரிவித்துள்ளார்.
ஆலப்புழையில் ஜெய்ராம் ரமேஷ் நேற்று நிருபர்களிடம் பேசினார். அவர், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வரவேண்டும் என்று தமிழகம், மராட்டியம் என பல மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், "யாரும், யாரையும் எந்த தீர்மானமும் நிறைவேற்றுமாறு கூறவில்லை. யாரும் எந்த தீர்மானமும் நிறைவேற்றுமாறு ராகுல் காந்தி கூறவில்லை. அவர்கள் தீர்மானம் நிறைவேற்றுவது இயல்பானது. ஆனால் அது கட்சியைக் கட்டுப்படுத்தாது" என தெரிவித்தார்.