5 உத்தரவாத திட்டங்களையும் நிறைவேற்றியே தீருவோம்; முதல்-மந்திரி சித்தராமையா உறுதி


5 உத்தரவாத திட்டங்களையும் நிறைவேற்றியே தீருவோம்; முதல்-மந்திரி சித்தராமையா உறுதி
x
தினத்தந்தி 27 Jun 2023 9:10 PM GMT (Updated: 28 Jun 2023 9:31 AM GMT)

5 உத்தரவாத திட்டங்களையும் நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ஹாசன்:

5 உத்தரவாத திட்டங்களையும் நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கெம்பேகவுடா ஜெயந்தி

ஹாசன் மாவட்டத்தில் நேற்று கெம்பேகவுடாவின் 514-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியை மாநில முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்து பேசியதாவது:-

கெம்பேகவுடா 1510-ம் ஆண்டில் எலகங்காவை ஆட்சி செய்தார். அப்போது இந்த மாநிலம் விஜயநகர மன்னர்களில் ஆட்சியின் கீழ் இருந்தது. இன்று பெங்களூரு சர்வதேச அளவில் பிரபலமாக இருப்பதற்கு கெம்பேகவுடாதான் காரணம். 1537-ம் ஆண்டில் பெங்களூருவிற்கு அடிக்கல் நாட்டினார். ஹாலசூரு என்ற நான்கு நுழைவாயில்களை நிறுவினார்.

அதாவது கெம்கேரி, யஷ்வந்த்புரா, எலகங்கா, பெங்களூரு ஆகிய நான்கு நுழைவாயில்களை உருவாக்கினார். இந்த பெங்களூரு ஒரு தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கப்பட்டது. கிருஷ்ணராயர் ஆட்சி காலத்தில் விஜயநகரில் உள்ள ஹம்பியின் மகிமையை பார்த்து எலகங்காவில் அதேபோல உருவாக்க வேண்டும் என்று கனவு கட்டார். அவரது கனவின் பயனாக உருவானதுதான் பெங்களூரு நகரம். அதற்கு கெம்பேகவுடா உறுதுணையாக இருந்தார்.

உத்தரவாத திட்டம்

கெம்பேகவுடாவின் நினைவாக இன்று சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. மதச்சார்ப்பற்ற மனிதராக திகழ்ந்த அவர் நமக்கு பல கொள்கைகளை வகுத்து கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அவரது பிறந்த நாளை ஹாசனில் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாளில் அரசின் அனைத்து உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு பஸ்களில் இலவச பயண திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. அடுத்ததாக அன்னபாக்ய திட்டம் அமல்படுத்தப்படும். இந்த அன்ன பாக்ய திட்டத்தை தடுப்பதை நிறுத்திவிட்டு, மத்திய அரசிடம் மக்களுக்கு உணவு அளிக்க அரிசி வழங்குகள் என்று பா.ஜனதா கட்சியினர் கேட்கவேண்டும். அதுவே நாம் மக்களுக்கு ஆற்றும் கடமை. 5 ஆண்டு கால அவர்கள் ஆட்சியில் எதுவும் செய்யவில்லை.

நிறைவேற்றப்படும்

2018-ம் ஆண்டு பா.ஜனதா 600 வாக்குறுதிகள் அளித்தது, அந்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று இன்றுவரை தெரியவில்லை. ஆனால் நாங்கள் சொன்னதை செய்வோம். எங்கிருந்தாவது 2 லட்சத்து 29 ஆயிரம் டன் அரிசியை வாங்கி மக்களுக்கு வழங்கியே தீருவோம். இந்த முடிவில் இருந்து நாங்கள் பின்வாங்குவது இல்லை. இதேபோல 5 உத்தரவாத திட்டங்களையும் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story