பா.ஜனதாவினரின் ஊழல்களை வேடிக்கை பார்க்கும் பிரதமர் மோடி; சித்தராமையா குற்றச்சாட்டு
பா.ஜனதாவினரின் ஊழல்களை பிரதமர் மோடி வேடிக்கை பாா்ப்பதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு:
பா.ஜனதாவினரின் ஊழல்களை பிரதமர் மோடி வேடிக்கை பாா்ப்பதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் குரல் யாத்திரை
ஹாவேரி மாவட்டம் ஹிரேகெரூரில் காங்கிரசின் மக்கள் குரல் யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-
தற்போது விவசாயத்துறை மந்திரியாக உள்ள பி.சி.பட்டீல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதன் பிறகு தன்னை ரூ.30 கோடிக்கு விற்று பா.ஜனதாவில் சேர்ந்தார். இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பணம் செலவு செய்து வெற்றி பெற்றார். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் கொள்ளை அடித்துள்ளது. அதற்காக தான் இந்த அரசை நான் அலிபாபாவும், 40 திருடர்களும் என்று கூறுகிறேன்.
மோடி வேடிக்கை பார்க்கிறார்
பா.ஜனதாவினரின் ஊழல்களை பிரதமர் மோடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். மாநிலத்தில் பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. கால்நடை டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு போட்டியிட 4 பேர் டிக்கெட் கேட்டுள்ளனர். 4 பேருக்கும் டிக்கெட் கொடுக்க இயலாது. ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் வழங்க முடியும். வெற்றி வாய்ப்புள்ள நபருக்கு டிக்கெட் வழங்கப்படும். டிக்கெட் கிடைக்காதவர்கள் கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.