மாட்டு வியாபாரி மர்மசாவு பற்றி விசாரிக்க 4 தனிப்படைகள்


மாட்டு வியாபாரி மர்மசாவு பற்றி விசாரிக்க 4 தனிப்படைகள்
x

மாட்டு வியாபாரி மர்மசாவு குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக ராமநகர் போலீஸ் சூப்பிரண்டு கூறி உள்ளார்.

ராமநகர்:

மாட்டு வியாபாரி மர்மசாவு குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக ராமநகர் போலீஸ் சூப்பிரண்டு கூறி உள்ளார்.

மர்மசாவு

மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் இத்ரேஷ் பாஷா(வயது 45). வியாபாரி. இவர், மாடுகளை விற்பனை செய்து வந்தார். இவர் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சாத்தனூர் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதற்கிடையே இத்ரேஷ் பாஷாவை, தேசிய பாதுகாப்பு படை அமைப்பின் தலைவர் புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்துக் கொலை செய்திருப்பதாக சாத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் மாடுகளை விலைக்கு வாங்கி சென்றபோது, அதை கடத்தி செல்வதாக நினைத்து இத்ரேஷ் பாஷாவை, புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி, ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், அதனை கொடுக்காததால் இத்ரேஷ் பாஷாவை அடித்துக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், வியாபாரி இத்ரேஷ் பாஷா மர்மசாவில் திடீர் திருப்பமாக சாத்தனூர் போலீசார், புனித் கெரேஹள்ளி மீது கொலை, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 தனிப்படைகள்

தற்போது புனித் கெரேஹள்ளி தலைமறைவாக உள்ளார். இத்ரேஷ் பாஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'இத்தேஷ் பாஷா மர்மசாவு குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சாத்தனூர் போலீசில் 3 வழக்குகள் பதிவாகி உள்ளன' என்று அவர் கூறினார்.


Next Story