கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 31-ந் தேதி தொடக்கம்
கர்நாடகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 31-ந் தேதி தொடங்குகிறது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 31-ந் தேதி தொடங்குகிறது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மார்ச் 31-ந் தேதி தேர்வு தொடக்கம்
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் இறுதியில் ஒவ்வொரு ஆண்டும் தொடங்கி நடைபெறும். பொதுத்தேர்வு நடைபெறுவதற்கான தற்காலிக பட்டியலை ஏற்கனவே பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. இதற்கு மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசமும் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 2022-23-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கான இறுதி பட்டியலை பள்ளி கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 31-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பட்டியல் வெளியீடு
அதன்படி, மார்ச் 31-ந் தேதி முதல்தர மொழி பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது. அதன்பிறகு, ஏப்ரல் 4-ந் தேதி கணிதமும், ஏப்ரல் 6-ந் தேதி 2-ம் தர மொழி பாடத்திற்கும், ஏப்ரல் 10-ந் தேதி அறிவியலும், ஏப்ரல் 12-ந் தேதி 3-ம் தர மொழி பாடமும், ஏப்ரல் 15-ந் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வுகளும் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு நடைபெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே இருப்பதால், பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.