கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கும் சித்தராமையா சுற்றுப்பயணத்திற்கு அதிநவீன சொகுசு பஸ்


கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கும் சித்தராமையா சுற்றுப்பயணத்திற்கு அதிநவீன சொகுசு பஸ்
x

கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கும் சித்தராமையா சுற்றுப்பயணத்திற்கு அதிநவீன சொகுசு பஸ் தயார் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே சித்தராமையாவின் 75-வது பிறந்தநாள் விழாவை காங்கிரஸ் கட்சி பிரமாண்டமாக கொண்டாடி இருந்தது. தற்போது ராகுல்காந்தி, இந்தியா ஒற்றுமை என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். இந்த பாதயாத்திரை முடிந்த பின்பு கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா, மக்கள் ஆசிர்வாதம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்திற்காக சொகுசு பஸ் ஆந்திர மாநிலத்தில் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏராளமான வசதிகளை கொண்டதாக அந்த பஸ் இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தன்னுடன் சுற்றுப்பயணம் செய்யும் சக தலைவா்களுடன் பேசுவதற்காக தனியாக அறை, ஓய்வு அறை, 2 டி.வி.க்கள், பஸ்சின் மேற்கூரைக்கு செல்ல லிப்ட் வசதி, சொகுசு இருக்கைகள் இடம் பெறுகிறது. பஸ் முழுவதும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story