ஒடிசா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு; ஜன்னல் கண்ணாடிகள் சேதம்


ஒடிசா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு; ஜன்னல் கண்ணாடிகள் சேதம்
x

இதனை தொடர்ந்து, ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

புவனேஸ்வர்,

ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி 20835 என்ற எண் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. ஒடிசாவின் தேன்கனல்-அங்குல் ரெயில்வே பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேராமண்டலி மற்றும் புதாபங்க் நகருக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் ரெயில் மீது கற்களை வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதுபற்றி பணியில் இருந்த ரெயில்வே போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

ரெயில்வே பாதுகாப்பு படையின் உதவி பாதுகாப்பு ஆணையாளர் கட்டாக்கில் இருந்து சம்பவ பகுதிக்கு உடனடியாக புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி ரெயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் பற்றி உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கற்களை வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை கண்டறியும் பணியில், உள்ளூர் போலீசாருடன் இணைந்து கிழக்கு கடலோர ரெயில்வே மண்டல பாதுகாப்பு பிரிவினரும் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கடந்த காலங்களிலும் இதுபோன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும், பயணிகள் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

1 More update

Next Story