விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறலாகும்: கோர்ட்டு கண்டனம்


விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறலாகும்:  கோர்ட்டு கண்டனம்
x

விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறலாகும் என கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

1993-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றின் குற்றவாளியாக இருப்பவர் அகமது கமால் ஷேக். விசாரணை கைதியான இவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்று திரும்பும்போது சோதனை என்ற பெயரில், நிர்வாணப்படுத்தி போலீசார் சோதனையிடுகின்றனர் என குற்றச்சாட்டாக கோர்ட்டில் கூறியுள்ளார்.

அவர்கள், பிற கைதிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையிலேயே இந்த சோதனையில் ஈடுபடுகின்றனர். அது தனது தனிநபர் உரிமையை மீறும் விசயம் மற்றும் அவமதிப்பு ஏற்படுத்த கூடியது ஆகும் தனது மனுவில் கூறியுள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது காவலர்கள், தகாத மற்றும் ஆபாச பேச்சுகளாக பேசுகின்றனர் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மும்பை சிறை அதிகாரிகள் மறுத்து உள்ளனர். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கூறியுள்ளனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் கூறுவதில் சில உண்மைகள் இருப்பதற்கான விசயங்கள் உள்ளன. இவரை தவிர, இந்த கோர்ட்டுக்கு அழைத்து வரப்படும் பிற விசாரணை கைதிகளும் இதுபோன்ற புகார்களை தெரிவித்து உள்ளனர்.

விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி அதிகாரிகள் சோதனை செய்வது என்பது அந்த நபரின் தனிப்பட்ட அடிப்படை உரிமையை மீறும் செயல் ஆகும். அது அவமதிக்க கூடியதும் ஆகும். இது மட்டுமின்றி, ஆபாச அல்லது தகாத வார்த்தைகளை பேசுவதும் விசாரணை கைதியை அவமதிப்பது ஆகும்.

அதனால், விசாரணை கைதிகளை இனி ஸ்கேனர்கள் அல்லது அதற்கான உபகரணங்களை கொண்டு மட்டுமே சோதனையிட வேண்டும் என மும்பை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அப்படி உபகரணங்கள் அல்லது ஸ்கேனர்கள் கிடைக்காது என்றால், தனிப்பட்ட முறையிலேயே கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதிகாரிகள் விசாரணை கைதியிடம் தவறாக நடக்கவோ அல்லது அவமதிப்பு செய்யவோ கூடாது. ஆடைகளை களைவதோ, தகாத வார்த்தைகளை பேசுவதோ கூடாது என உத்தரவு தெரிவிக்கின்றது.


Next Story