அரசுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வலிமையான உறவு உள்ளது: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு


அரசுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வலிமையான உறவு உள்ளது: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு
x

அரசு மற்றும் இளைஞர்களுக்கு இடையே வலிமையான உறவு உள்ளது என்று கேரளாவில் நடந்த இளைஞர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அவரது இந்த சுற்றுப்பயணத்தில் 7 நகரங்களுக்கு சென்று, பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் உரையாற்றுகிறார்.

இதன்படி அவரது பயணம் டெல்லியில் இருந்து இன்று தொடங்கியது. முதலில், மத்திய இந்திய பகுதியான மத்திய பிரதேசத்திற்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்பு, ரேவா நகரில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனையொட்டி நடந்த சிறப்பு கண்காட்சியிலும் அவர் பங்கேற்றார். இதில், மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார்.

இதன்பின் ரேவா நகரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, நாட்டில் பஞ்சாயத்து ராஜ் நடைமுறையை வலுப்படுத்த எங்களுடைய அரசு சீராக பணியாற்றி வருகிறது. கிராமப்புற இந்தியாவில் வசிப்பவர்களின் வாழ்வை எளிமையாக்க அரசு மேற்கொண்டு வரும் எந்தவொரு திட்டம் என்றாலும், அதனை நம்முடைய பஞ்சாயத்து அமைப்புகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகின்றன.

2014-ம் ஆண்டுக்கு பின் பஞ்சாயத்துகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடானது, ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு ரூ.70 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கீடு இருந்தது என்று பேசினார். பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் மொத்தம் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்து உள்ளார்.

இதன்பின்னர், இன்று மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு அவர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து சென்றார். கேரளாவின் திவாரா பகுதியில் நடந்த இளைஞர் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, பா.ஜ.க. மற்றும் இந்திய இளைஞர்கள் இன்றைய தினம் ஒரே மாதிரியான அலைநீளம் மற்றும் பார்வையை பகிர்ந்து கொள்கின்றனர். நாங்கள் சீர்திருத்தங்களை கொண்டு வருகிறோம். இளைஞர்கள் முடிவுகளை கொண்டு வருகின்றனர்.

அரசுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் இடையே வலிமையான ஓர் உறவு உள்ளது. இந்த சகாப்தம் இளைஞர் தலைமையிலான வளர்ச்சிக்கான சகாப்தம் என்று பா.ஜ.க. உருவாக்கி உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஒவ்வொரு பிரிவிலும் முந்தின அரசு ஊழல்களை செய்திருந்தது என கூறிய அவர், மற்றொரு புறம் ஒவ்வொரு பிரிவிலும் பா.ஜ.க. அரசு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஆத்மநிர்பார் பிரசாரத்தின் வழியே, இளைஞர்களுக்கு போதிய சந்தர்ப்பங்கள் கிடைத்து உள்ளன என்று அவர் பேசியுள்ளார்.


Next Story