முதலாளியுடன், மனைவிக்கு கள்ளக்காதல்: காபித்தோட்ட தொழிலாளி தற்கொலை
முதலாளியுடன், மனைவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதால் மனம் நொந்து காபித்தோட்ட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.
சிவமொக்கா:
முதலாளியுடன், மனைவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதால் மனம் நொந்து காபித்தோட்ட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.
கள்ளக்காதல்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அரபிளிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(வயது 33). இவர் அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான மதுசூதன் என்பவரின் பாக்கு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இதற்காக பாக்கு தோட்டத்தின் அருகே உள்ள வாடகை வீட்டில் நாகராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருந்தார். கடந்த 5 வருடங்களாக நாகராஜும், அவரது மனைவியும் மதுசூதனின் பாக்கு தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மதுசூதனுக்கும், நாகராஜின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
மாயம்
இதுபற்றி அறிந்த நாகராஜ், தனது மனைவியை கண்டித்தார். மேலும் மதுசூதனிடமும் பேசி தனது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட்டும் விடும்படி கூறினார். ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகராஜின் மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளுடன் மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த நாகராஜ், போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோரியிருந்தார்.
இந்த நிலையில் சிவமொக்கா மகளிர் போலீசார் நாகராஜின் மனைவி, அவரது கள்ளக்காதலனான மதுசூதனுடன் சேர்ந்து வீட்டைவிட்டு ஓடியதும், பின்னர் இருவரும் தனியாக வசித்து வந்ததையும் கண்டுபிடித்தனர். அதையடுத்து நாகராஜின் மனைவியை போலீசார் மீட்டு நாகராஜுடன் அனுப்பி வைத்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதுபற்றி அறிந்த நாகராஜின் மனைவியின் குடும்பத்தினர் வந்தனர். பின்னர் அவர்கள் நாகராஜின் மனைவியை தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர். பின்னர் ஊர் முக்கிய பிரமுகர்கள் பஞ்சாயத்து நடத்தி நாகராஜையும், அவரது மனைவியையும் சேர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே நாகராஜுடன், அவரது மனைவியின் கள்ளக்காதலனான மதுசூதன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அவர் தனது கள்ளக்காதலியான நாகராஜின் மனைவியை அடிக்கடி சந்தித்தும் வந்தார். இதனால் நாகராஜ் மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கைது
இதுபற்றி நாகராஜின் தந்தை வெங்கடேஷ், ஒலேஹொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நாகராஜின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது நாகராஜ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில் நாகராஜ், எனது சாவுக்கு என்னுடைய முதலாளி மதுசூதன் தான் காரணம் என்று எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து மதுசூதனை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.