பயணிகளுக்காக ரெயில்வே அறிமுகப்படுத்தும்'சூப்பர் ஆப்'.. என்னென்ன அம்சங்கள் இருக்கும்?


பயணிகளுக்காக ரெயில்வே அறிமுகப்படுத்தும்சூப்பர் ஆப்.. என்னென்ன அம்சங்கள் இருக்கும்?
x

கோப்பு படம் (பிடிஐ)

தினத்தந்தி 14 Jan 2024 5:10 AM GMT (Updated: 14 Jan 2024 5:10 AM GMT)

தற்போது ரெயில்வே ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் கூடுதல் அம்சங்களுடன் சூப்பர் ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். தொலை தூரங்களுக்கு செல்லும் ரெயில்களின் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

டிக்கெட்டுகளை ரெயில் நிலையங்களில் உள்ள கவுண்ட்டர்களுக்கே சென்று புக்கிங் செய்வது போக இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொழில் நுட்ப வசதி பெருகிவிட்ட தற்போதைய காலத்தில் பலரும் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக ஐ.ஆர்.சி.டி.சி மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை 10 கோடிக்கும் மேற்பட்டோர் டவுன்லோடு செய்துள்ளனர்.

ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் புக்கிங் செயலி போக புறநகர் ரெயில் டிக்கெட்டுகளுக்காக யூடிஎஸ் செயலி மற்றும் ரெயில்கள் எங்கு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள தனி செயலி என ஒவ்வொரு சேவைகளுக்கும் தனித்தனி செயலிகளை பயணிகள் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, இது அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வர ரெயில்வே திட்டமிட்டது.

அதன்படி தற்போது சூப்பர் ஆப் என்ற செயலியை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த செயலியை உருவாக்க ரூ.90 கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும். செயலியை உருவாக்கும் பணிகள் சுமார் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெயில்வேயின் பிற செயலிகளான PortRead, Satark, TMS-Nirikshan, ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட், ஐஆர்சிடிசி இகேட்டரிங், ஐஆர்சிடிசி ஏர் என 12-க்கும் மேற்பட்ட ரெயில்வே செயலிகள் ஒரே செயலியாக ஒருங்கிணைத்து கொண்டு வரப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பயணிகள் தனித்தனியாக செயலிகளை டவுன்லோடு செய்ய தேவையிருக்காது என்றும் ஒரே செயலியின் மூலமாக ரெயில்வே சேவைகளை பெற முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story