அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் - சுப்ரீம் கோர்ட்டு உருவாக்குகிறது


அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் - சுப்ரீம் கோர்ட்டு உருவாக்குகிறது
x

கோப்புப்படம்

அரசு அதிகாரிகளை கோர்ட்டுக்கு வரவழைக்க சம்மன் அனுப்புவது குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

புதுடெல்லி,

ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு வசதிகள் செய்து தருவது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை உத்தரபிரதேச மாநில அரசு நிறைவேற்றவில்லை.

இதனால், அலகாபாத் ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உத்தரபிரதேச அரசின் நிதித்துறை செயலாளர் ஷாகித் மன்சூர் அப்பாஸ் ரிஸ்வி, சிறப்பு செயலாளர் சரயு பிரசாத் சர்மா ஆகியோர் கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த ஏப்ரல் மாதம், அலகாபாத் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை காவலில் எடுக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி

அதே சமயத்தில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2 அதிகாரிகளையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது தொடரப்படும் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை கையாள வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

வழிகாட்டு நெறிமுறைகள்

நிலுவையில் உள்ள வழக்குகளில், அரசு அதிகாரிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தாலே போதுமானது. அவர்கள் நேரில் வரத் தேவையில்லை. ஆனால், கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராவது தேவைப்படலாம்.

அத்தகைய சூழ்நிலையில், அரசு அதிகாரிகளை சம்மன் அனுப்பி அழைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு உருவாக்கும். நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் இவை பொருந்துவதாக அமையும் என்று நீதிபதிகள் கூறினர்.


Next Story