அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு..!!


அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு..!!
x

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வெளியாகிறது.

புதுடெல்லி,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஐகோர்ட்டில் அமர்வில் முறையிட்டது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.

மேல்முறையீடு

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு

இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டது.

இதன்பின்னர் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்பேரில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

இன்று தீர்ப்பு

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று கூறுகிறது.

தீர்ப்பை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறுகிறார். ஏற்கனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக கிடைத்து விட்டது. இதனால் அந்த அணி உற்சாகத்தில் உள்ளது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இந்த தீர்ப்பை இரு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

1 More update

Next Story