சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம்: அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் ஆய்வு
சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
டெல்லி,
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த 13ம் தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, சுவாதி மாலிவாலை அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியுள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் புகார் அளித்தார். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் சுவாதி மாலிவால் வீட்டிற்கு சென்று போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். இதன் பின்னர் பிபவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் பிபவ் குமார் வீட்டில் இல்லாததால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அவரின் உதவியாளர் பிபவ் குமார் 8 முறை கன்னத்தில் அறைந்ததாக சுவாதி எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளார். மேலும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என பிபவ் குமார் மிரட்டியதாகவும் சுவாதி தெரிவித்துள்ளார். அவர் தன் முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் தாக்கியதாகவும் சுவாதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுவாதி மாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். போலீசாருடன் தடயவியல் அதிகாரிகளும் கெஜ்ரிவால் வீட்டில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதை ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதேபோல், தடயவியல் ஆய்வு மூலம் தடயங்களை கைப்பற்றவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, விசாரணைக்காக சுவாதி மாலிவாலையும் போலீசார் கெஜ்ரிவால் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு 13ம் தேதி தாக்குதல் நடந்தது எவ்வாறு என்பதை போலீசார் முன்னிலை நடித்து காட்ட உள்ளார்.