பிரதமர் மோடி பயணித்த மெட்ரோ ரெயிலில் எழுத்தப்பட்ட சர்ச்சை எழுத்து - அதிரடிகாட்டிய சிறப்பு பாதுகாப்பு குழு
பிரதமர் மோடி பயணித்த மெட்ரோ ரெயிலில் வர்ணம் பூசப்பட்டு சர்ச்சைக்குரிய வகையில் 3 எழுத்து எழுதப்பட்டிருந்தது.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மெட்ரோ ரெயில் பாகம் 1 திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 31-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் ஏறி பயணித்தார். அவருடன் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயணித்தனர்.
இதனிடையே, பிரதமர் மோடி பயணிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அவர் பயணிக்க திட்டமிட்டிருந்த மெட்ரோ ரெயிலின் வெளிப்பகுதியில் வர்ணம் பூசப்பட்டு சில எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
பிரதமர் மோடி பயணிக்கவிருந்த மெட்ரோ ரெயில் பெட்டிக்கு 2 பெட்டிகள் தள்ளி அந்த வர்ணம் பூசப்பட்டிருந்தது. அதில் டிஏஎஸ் (TAS) என எழுதப்பட்டிருந்தது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பயணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் மெட்ரோ ரெயிலில் இவ்வாறு எழுதப்பட்டிருந்ததால் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டனர். (TAS) என்பது படமெடு (Take a Shot) என்று பொருள் என்பதால் இதில் ஏதேனும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு குழுவுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தியது.
மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணிக்க சில மணி நேரங்களே இருந்த நிலையில் உச்சகட்ட விசாரணைக்கு மற்றும் சோதனைக்கு பின் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என உறுதியானது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணித்தார்.
பிரதமர் மோடி பயணித்த மெட்ரோ ரெயிலில் சர்ச்சைக்குரிய வகையில் எழுத்துக்களை எழுதிய சம்பவம் தொடர்பாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு குழு இணைந்து அதிரடி விசாரணை மேற்கொண்டது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இது போன்ற சம்பவங்கள் பிற மாநிலங்களில் நடந்துள்ளதாக என விசாரணை நடத்தினர். அப்போது, கேரளா மற்றும் மராட்டியத்தில் மெட்ரோ ரெயிலில் இதுபோன்று சர்ச்சைக்குரிய எழுத்துக்களை சிலர் ஏற்கனவே எழுதியுள்ளனர் என்பது தெரியவந்தது.
விசாரணையை தீவிரப்படுத்திய பாதுகாப்பு படையினர் மெட்ரோ ரெயிலில் சர்ச்சைக்குரிய வகையில் எழுதியது இத்தாலியை சேர்ந்த 4 பேர் என்பதை கண்டுபிடித்தனர். அகமதாபாத்தின் பல்டி என்ற நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த இத்தாலியர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யபப்ட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் மெட்ரோ ரெயில்கள் மற்றும் பிற பொதுச்சொத்துக்களில் வர்ணம் பூசி, எழுத்துக்களை எழுதும் சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
பிரதமர் மோடி பயணித்த மெட்ரோ ரெயிலில் (TAS) என எழுதப்பட்டதற்கு அர்த்தம் என்ன? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் Take a Shot என்பதை சிகிரெட் புகைத்தல் என்ற அர்த்தத்தில் எழுதியதாக அந்த 4 பேரும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.