மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை - பஞ்சாப் விவசாய சங்க தலைவர் தகவல்


மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை - பஞ்சாப் விவசாய சங்க தலைவர் தகவல்
x

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசிடம் அழைப்பு வந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சண்டிகர்,

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது என மத்திய விவசாயத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா தெரிவித்திருந்தார்.

மேலும் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசுடன் விவசாய சங்கங்களின் தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பஞ்சாப் கிசான் சங்கர்ஷ் மஸ்தூர் சங்கத்தின் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது.

சண்டிகரில் நாளை மாலை 5 மணிக்கு மத்திய மந்திரிகள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோருடன் விவசாய சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.


Next Story