'தமிழ் மொழியை பாதுகாக்க தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்'; துரைசாமி பேச்சு
தமிழ் மொழியை பாதுகாக்க தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று, அனைத்து இந்திய தமிழ் சங்க பேரவையின் தலைவர் துரைசாமி கூறினார்.
பெங்களூரு:
தமிழ் மொழியை பாதுகாக்க தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று, அனைத்து இந்திய தமிழ் சங்க பேரவையின் தலைவர் துரைசாமி கூறினார்.
ஆர்வத்துடன் புத்தகங்களை பார்த்த மக்கள்
கர்நாடக பத்திரிகையாளர் சங்கம் மற்றும் கர்நாடக தமிழ் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து பெங்களூருவில் 8 நாட்கள் நடைபெறும் தமிழ் புத்தக திருவிழாவை, பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் வைத்து நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய தமிழ் புத்தக திருவிழாவை, விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நேற்று 2-வது நாள் தமிழ் புத்தக திருவிழா நடந்தது. திருவிழா அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புத்தகங்களை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும் தாங்கள் விரும்பிய புத்தகங்களையும் வாங்கி சென்றனர்.
புத்தகம் வெளியீடு
புத்தக திருவிழாவையொட்டி மார்த்தாண்டம் அறிவுக்களஞ்சியம் நூலகம் சார்பில் பேபி ஜெயகுமாரின் மேஜிக் ஷோ நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. இன்றும்(செவ்வாய்க்கிழமை) மேஜிக் ஷோ நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு முத்துசெல்வனின் 'முத்து தமிழ்' என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து இந்திய தமிழ் சங்க பேரவை தலைவர் துரைசாமி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தை சிவமொக்கா தமிழ் தாய் சங்கத்தின் தலைவர் மஞ்சுநாத் பெற்று கொண்டார். புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு பெங்களூரு தமிழ் சங்கத்தின் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். கர்நாடக திராவிடர் கழக செயலாளர் முல்லைகோ வரவேற்றார்.
தமிழை இழந்து விடுவோம்
கர்நாடக திராவிடர் கழக தலைவர் ஜானகிராமன், மங்களூரு தமிழ்சங்க தலைவர் செந்தில் கிருஷ்ணமூர்த்தி, மங்களூரு தமிழ்சங்க பொருளாளர் ஹரி துரைசாமி, ஓய்வுபெற்ற என்ஜினீயர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து இந்திய தமிழ் சங்க பேரவை செயலாளர் முத்துராமன், திருச்சி பாவாணர் தமிழ் இயக்கத்தின் தலைவர் திருமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, புத்தக தொகுப்பாளர் ஜெயசங்கர் ஏற்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து இந்திய தமிழ் சங்க பேரவையின் தலைவர் துரைசாமி பேசுகையில் கூறியதாவது:-
பெங்களூருவில் முதல்முறையாக தமிழ் புத்தக திருவிழா நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற மாநிலங்களில் வசித்து வரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுத்து வருகிறோம். ஆனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 சதவீதம் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் பேச தெரிகிறது. ஆனால் படிக்கவோ, எழுதவோ தெரியவில்லை. குழந்தைகள் ஆங்கில வழி கல்விக்கு சென்று விட்டார்கள். இப்படியே சென்று விட்டால் தாய் மொழியான தமிழை இழந்து விடுவோம்.
ஒருங்கிணைந்து செயல்பட....
கலாசாரம், பண்பாடு காணாமல் போய் விடும். நான் அனைத்து இந்திய தமிழ் சங்க பேரவையின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அனைத்து சங்கங்களையும் அழைத்து மாநாடு நடத்தினேன். அந்த மாநாட்டில் தமிழ் பயிற்று மொழியாக வர வேண்டும், தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றி அந்த தீர்மானங்களை கோரிக்கைகளாக அமைச்சர்களிடம் வழங்கினோம்.
அந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் உலக தமிழர்களை ஒருங்கிணைத்து நாம் எப்படி ஜல்லிக்கட்டுக்காக போராடினோமோ அதுபோல மொழியை பாதுகாக்க தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எல்லா சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிந்தனை களம்
இதனை தொடர்ந்து மாலை 6 மணி முதல் சிந்தனை களம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய பேனா நண்பர் பேரவையின் தலைவர் கருண் தலைமை தாங்கினார். மத்திய சுகாதாரத்துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் சண்முகானந்தன், பெங்களூருவில் வசித்து வரும் பட்டய கணக்காளர் கே.பாபு, சிறுமலர் உயர்நிலைபள்ளியின் நிறுவனர் மதுசூதனபாபு, தமிழ் ஆர்வலர் பிரமநாயகம், கவிஞர் செந்தூர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்க பொருளாளர் பேராசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.
புத்தக திருவிழாவின் 3-வது நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இலக்கிய மாலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிந்தனை களம் நடைபெறுகிறது. இதில் பிரபல பாடல் ஆசிரியரும், கவிஞருமான அறிவுமதி கலந்து கொண்டு சிந்தனை உரை ஆற்ற உள்ளார்.
தள்ளுபடி விலையில் புத்தக விற்பனை
பெங்களூரு தமிழ்சங்கத்தில் நடந்து வரும் தமிழ் புத்தக கண்காட்சியில் 'தினத்தந்தி' அரங்கு உள்பட 25 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 'தினத்தந்தி' அரங்கில் பத்திரிகை மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த சிவந்தி ஆதித்தனாரின் சாதனை சரித்திர புத்தகம், சிகரம் தொடும் சிந்தனைகள் உள்ளிட்ட புத்தகங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த புத்தகங்கள் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.