"உலகின் பழமையான மொழி தமிழ்" - பாரிசில் உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதம்


உலகின் பழமையான மொழி தமிழ் - பாரிசில் உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதம்
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 14 July 2023 12:06 AM IST (Updated: 14 July 2023 11:19 AM IST)
t-max-icont-min-icon

உலகின் பழமையான மொழி ஒரு இந்திய மொழி என்பதை விட பெரிய பெருமை வேறென்ன இருக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டில் இன்று ( ஜூலை 14ஆம் தேதி) பாஸ்டில் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் முப்படைகளைச் சேர்ந்த ஒரு ராணுவக் குழு பங்கேற்கும். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி நேற்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றார். அந்நாட்டு அதிபர் மெக்ரோனை நேரில் சந்தித்து அவருடன் விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்நிலையில் பாரிசில் உள்ள லா சீன் மியூசிகேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவர் இங்கு இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றிய அவர், வெளிநாட்டில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கேட்கும் போது, நான் வீட்டிற்கு வந்துவிட்டதாக உணர்கிறேன் என்று அவர் தனது உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், "நான் பலமுறை பிரான்ஸ் வந்துள்ளேன் ஆனால் இம்முறை எனது வருகை சிறப்பானது. இன்று பிரான்சின் தேசிய தினம். பிரான்ஸ் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி. இன்று பிரான்ஸ் பிரதமர் என்னை விமான நிலையத்தில் வரவேற்றார், நாளை (இன்று) எனது நண்பர் இம்மானுவேல் மக்ரோனுடன் தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொள்வேன். இது இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள உடைக்க முடியாத நட்புறவின் பிரதிபலிப்பாகும்.

பருவநிலை மாற்றம், விநியோகச் சங்கிலிகள், தீவிரவாதம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும், உலகம் இந்தியாவையே பார்க்கிறது. இன்று உலகம் புதிய உலக ஒழுங்கை நோக்கி நகர்கிறது. இந்தியாவின் பங்கு வேகமாக மாறி வருகிறது. இந்தியா தற்போது G20 தலைவராக உள்ளது, முழு G20 குழுவும் இந்தியாவின் திறனைப் பார்க்கிறது.

இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மையின் வலுவான அடித்தளம் மக்கள்-மக்கள் இணைப்பு. 21ம் நூற்றாண்டின் பல சவால்களை இந்தியாவும் பிரான்சும் சமாளிக்கின்றன. எனவே, இந்த முக்கியமான நேரத்தில், நமது நாடுகளுக்கு இடையிலான மூலோபாய கூட்டாண்மையின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சின் பெருமையைக் காக்கும் இந்திய வீரர்கள், தங்கள் கடமையைச் செய்யும்போது பிரெஞ்சு மண்ணில் வீரமரணம் அடைந்தனர். இங்கு போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட், நாளை தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது

உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப்பெரிய பெருமை. இதை விட பெருமை வேறு என்ன இருக்க முடியும்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி 40 ஆண்டுகளுக்கு முன்பு அலையன்ஸ் பிராங்காய்ஸ் உறுப்பினராக இருந்ததாக தெரிவித்தார்.

1 More update

Next Story