முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது
புதுடெல்லி,
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெண்டர் முறைகேடு வழக்கில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாக கடந்த நவம்பர் 30-ந்தேதி உத்தரவிட்டனர். ஆனால் அதேசமயம் வழக்கின் புலன்விசாரணை அதிகாரி தனது விசாரணையை தொடரலாம் என்றும், அதில் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டால், குற்றப்பத்திரிகையில் அவரை சேர்க்கலாம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.