நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் கிடைக்கும் - மத்திய அரசு


நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் கிடைக்கும் - மத்திய அரசு
x

கோப்புப்படம்

நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

நடப்பு நிதி ஆண்டில், தனிநபர் வருமானவரி, கார்ப்பரேட் வரி என நேரடி வரிகள் மூலம் ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் கோடியும், மறைமுக வரிகள் (சுங்கவரி, உற்பத்தி வரி, ஜி.எஸ்.டி.) மூலம் ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் கோடியும் வசூலாகும் என்று பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது.

அதாவது, நேரடி, மறைமுக வரிகள் மூலம் மொத்தம் ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் கோடி வசூலாகும் என்று கூறப்பட்டு இருந்தது.

நல்ல அறிகுறியாக, வருமானவரித்துறை, ஜி.எஸ்.டி. துறை, மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் தரவுகளை பார்த்தால், வரிவசூல் பட்ஜெட் மதிப்பீட்டை தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதன்படி, நேரடி வரிகள் மூலம் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் கோடி, மறைமுக வரிகள் மூலம் ரூ.14 லட்சம் கோடி என மொத்தம் ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது, பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ.4 லட்சம் கோடி அதிகம்.

பொருளாதாரம் சீரடைந்தது, வரி செலுத்துவோர் தவறாமல் வரி செலுத்தியது உள்ளிட்ட காரணங்களால் வரி வசூல் அதிகரிக்கிறது. வரி வருவாயில் ஏற்பட்ட வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட தொடர்ந்து அதிகமாக இருக்கும்.

நடப்பு நிதி ஆண்டில், உற்பத்தி வரி, சுங்கவரி ஆகியவை குறைக்கப்பட்ட போதிலும், பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கை எட்டி விடுவோம் என்று அவர் கூறினார்.


Next Story