தெலுங்கானா: பிரதமர் மோடியின் வருகை, வரவேற்பை புறக்கணித்த முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்


தெலுங்கானா:  பிரதமர் மோடியின் வருகை, வரவேற்பை புறக்கணித்த முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்
x

தெலுங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவை பங்கேற்காமல் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் புறக்கணித்து உள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தந்து உள்ளார்.

இதற்காக ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பட் விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் இன்று காலை வந்திறங்கினார். பிரதமர் மோடி ஐதராபாத் நகரில் விமான நிலையத்தில் வந்திறங்கியதும், அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் உயரதிகாரிகள், பிற முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

இதன்பின்னர் பிரதமர் மோடி, செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரெஸ் ரெயிலில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார். அதன்பின்பு, ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியை வரவேற்று, விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு அழைப்பு விடப்பட்டது. எனினும், அவர் இதனை புறக்கணித்து உள்ளார்.

தேசிய அளவில் தனது கட்சியை விரிவாக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி என இருந்த தனது கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பாரதீய ராஷ்டீரிய சமிதி என மாற்றினார்.

2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையில் தேசிய கட்சியாக உருமாற்றும் முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் அவர் கடந்த காலத்தில் ஈடுபட்டார்.


Next Story