தெலுங்கானா: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - ரேவந்த் ரெட்டி


தெலுங்கானா: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - ரேவந்த் ரெட்டி
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 30 March 2024 2:46 AM GMT (Updated: 30 March 2024 8:05 AM GMT)

தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டவர்கள் செர்லாப்பள்ளி சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் தற்போது முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலுங்கானாவில் இதற்கு முன்பு சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது, மாநில காவல்துறையினர் பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு ஒட்டுக்கேட்கப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் பி.ஆர்.எஸ். கட்சிக்கு நிதி வழங்க தொழிலதிபர்கள் அச்சுறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 4 மூத்த போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. கே.டி.ராமா ராவ் கூறுகையில், ஒரு சில நபர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். இந்த நிலையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;-

"ஒரு சில நபர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம் என்று கே.டி.ராமா ராவ் கூறுகிறார். அவரால் எப்படி இதை கூற முடியும்? தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டவர்கள் செர்லாப்பள்ளி சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களின் பேச்சைக் கேட்ட அதிகாரிகள் தற்போது சிறையில் இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.


Next Story