காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு


காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு
x

Image Credits: ANI

தினத்தந்தி 24 Nov 2023 7:25 AM GMT (Updated: 24 Nov 2023 7:52 AM GMT)

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த மேலும் ஒரு ராணுவ வீரர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

ரஜோரி மாவட்டம் பஜிமால் கிராமத்தில் உள்ள களகோட் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

24 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் உயர் பதவி வகித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ அதிகாரிகள், 2 வீரர்கள் என பாதுகாப்புப்படையினர் மொத்தம் 4 பேர் வீரமரணமடைந்தனர். மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த வீரர் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக ரஜோரி தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு வீரருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story