பா.ஜ.க. தேசிய தலைவர் மற்றும் பிற தலைவர்கள் பழைய கூட்டணியினரை தேடி ஓடுகின்றனர்; எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே பேச்சு


பா.ஜ.க. தேசிய தலைவர் மற்றும் பிற தலைவர்கள் பழைய கூட்டணியினரை தேடி ஓடுகின்றனர்; எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே பேச்சு
x
தினத்தந்தி 18 July 2023 9:50 AM GMT (Updated: 18 July 2023 11:50 AM GMT)

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, பா.ஜ.க. தேசிய தலைவர் மற்றும் பிற தலைவர்கள் பழைய கூட்டணியினரை தேடி ஓடுகின்றனர் என பேசியுள்ளார்.

பெங்களூரு,

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. இந்த தேர்தலில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர்.

அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நேற்றும், இன்றும் (17, 18 ஆகிய நாட்களில்) நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்ள 26 கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டது. அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். அதில், கட்சிகளுக்கு இடையே விரிவான ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான விசயங்களில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார். இதேபோன்று, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, சென்னையில் ஸ்டாலினின் பிறந்த நாளின்போதே நான் கூறினேன். காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரம் மீதோ அல்லது பிரதமர் பதவி மீதோ விருப்பம் இல்லை.

இந்த கூட்டத்தில் எங்களது நோக்கம், எங்களுக்கு அதிகார லாபம் கிடைக்க வேண்டும் என்பது இல்லை. நமது அரசியலமைப்பு, ஜனநாயகம், மதசார்பற்ற நிலை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதே ஆகும் என கார்கே பேசியுள்ளார்.

நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில், தமிழக முதல்-மந்திரி மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளின்போது கார்கே, பிரதமர் வேட்பாளர் என்பது கேள்வியே இல்லை. அனைத்து ஒத்த மனமுடைய கட்சிகளும், பிரிவினை சக்திகளுக்கு எதிராக போராட ஒன்றிணைய வரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து கார்கே இன்று பேசும்போது, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் பிற தலைவர்கள் பழைய கூட்டணியினரை தேடி மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு ஓடுகின்றனர். அக்கட்சி ஓட்டுக்காக கூட்டணி கட்சிகளை பயன்படுத்தி விட்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவர்களை கழற்றி விட்டு விட்டது என்றும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


Next Story