தந்தையை கோடரியால் தாக்கி கொன்ற மகள்


தந்தையை கோடரியால் தாக்கி கொன்ற மகள்
x

ராமநகர் அருகே முதியவரை கோடரியால் தாக்கி கொலை செய்த மகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களுரு:

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா நாய்தோலே கிராமத்தை சேர்ந்தவர் குச்சேரய்யா (வயது 68)., விவசாயி. இவரது மகள் புஷ்பலதா (30). இவருக்கு திருமணமாகி விட்டது. கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவருடன் சேர்ந்து வாழ புஷ்பலதா மறுத்து விட்டார். கடந்த சில ஆண்டுகளாக நாய்தோலே கிராமத்தில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டிலேயே அவர் வசித்து வருகிறார்.

கடந்த 18-ந் தேதி இரவு குச்சேரய்யாவும், புஷ்பலதாவும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது தந்தை, மகள் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த புஷ்பலதா வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து தந்தை குச்சேரய்யாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில், படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

பின்னர் வீட்டில் இருந்து புஷ்பலதா தப்பி சென்று விட்டார். குச்சேரய்யா தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். அங்கு யாரும் செல்வது இல்லை. நேற்று முன்தினம் மாலையில் உறவினர் ஒருவர் சென்ற போது தான் குச்சேரய்யா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சென்னப்பட்டணா புறநகர் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது கணவரை பிரிந்து வாழ்ந்த புஷ்பலதா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், பணப்பிரச்சினையில் தந்தையை அவர் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள புஷ்பலதாவை தேடிவருகிறார்கள்.


Next Story