இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பு : பொருளாதார சிக்கலை ஏற்படுத்துமா...! மத்திய அரசுக்கு நெருக்கடியா...!


இஸ்லாமிய  நாடுகளின் எதிர்ப்பு : பொருளாதார சிக்கலை ஏற்படுத்துமா...!  மத்திய அரசுக்கு நெருக்கடியா...!
x
தினத்தந்தி 7 Jun 2022 10:41 AM GMT (Updated: 7 Jun 2022 10:51 AM GMT)

இஸ்லாமிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள மோதல் இந்தியாவிற்கு ஏற்றுமதி, இறக்குமதி ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக மராட்டிய காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல் நவீன் ஜிந்தால் தனது டுவிட்டர் பதிவில் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு சர்வதேச அளவில் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தனித் தனியே இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுபுர் சர்மாவுக்கு அனுப்பியுள்ள நோடீஸ்சில், உங்களின் கருத்து கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக உங்கள் மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நீங்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிந்தாலுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்சில், நீங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து கட்சியின் அடிப்படை கொள்கை மற்றும் சட்டத்திற்கு எதிரானது. எனவே, நீங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அந்த கட்சியின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில், "எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் எதிரானது. பாஜக அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிப்பதில்லை இந்தியாவின் ஆயிரக்கணக்கான வருட வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து செழித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது"

ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது என்று விளக்கம் அளித்தது

இந்த விவகாரத்தில் 15 நாடுகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், அரபு அமீரகம், ஜோர்டன், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், பாகிஸ்தான், மாலத்தீவு, லிபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு எதிராக திரண்டு உள்ளன. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுவதாக இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பிபிசி ஆங்கில ஊடகத்திடம் கருத்து தெரிவித்த அரசியல் நிபுணர்கள் இந்த மோதல் இப்போதைக்கு ஓயாது என்று குறிப்பிட்டு உள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் வெடித்துள்ளது. பல இஸ்லாமிய நாடுகளை இந்த விவகாரம் கொதிப்படைய செய்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் நடைபெறும் சமீபத்திய சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. அதனால் இப்போதைக்கு பிரச்சனை சரி ஆகாது.

மேலும் அதாவது ஆட்சியில் இருக்கும் உயர் தலைவர்கள் இதில் விளக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் தாமாக முன் வந்து கருத்து தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சனை தீரும். அதுவரை இஸ்லாமிய நாடுகள் இந்த விவகாரத்தை சும்மா விட வாய்ப்பு இல்லை. பாஜக வெறுமனே மதங்களை மதிக்கிறோம் என்று கூறுவது எல்லாம் பிரச்சனையை தீர்க்காது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஐநா தற்போது இதில் கருத்து தெரிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த செய்தியாளர், இந்தியாவில் நுபுர் சர்மா நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இதை உலக நாடுகள் விமர்சனம் செய்து வருகின்றன. அரபு நாடுகள் பல விமர்சனம் செய்து வருகின்றன. இது தொடர்பாக இந்தியாவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதில் ஐநாவின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டிபன் எல்லா மதத்திற்கும் மரியாதை, சகிப்புத்தன்மை எல்லா நாட்டிலும் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நான் இது தொடர்பான செய்திகளை படித்தேன். ஆனால் நேரடியாக அவர் என்ன சொன்னார் என்று நான் கேட்கவில்லை. ஆனால் அதை எல்லாம் தாண்டி உலகம் முழுக்க எல்லா நாட்டிலும் எல்லா மதத்திற்கும் மரியாதை தரப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து என்று ஸ்டிபன் தெரிவித்துள்ளார்.

இந்த நாடுகளின் எதிர்ப்புகளை சமாளிக்க இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லி சார்பாக களமிறக்கப்பட்டு உள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை நிர்வாகிகள் சார்பாக பல்வேறு நேரடி, மறைமுக அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்தது.

இதற்கு " நீங்கள் குறுகிய எண்ணத்தோடு செயல்படுகிறீர்கள்" என்று இந்தியாவும் பதிலடி கொடுத்து இருந்தது. ஆனால் மற்ற நாடுகளின் விமர்சனத்திற்கு இந்தியா பதில் அளிக்கவில்லை. கத்தாருக்கு மட்டும் இந்தியா, அது எங்கள் நாட்டின் கருத்து கிடையாது என்று தன்மையாக பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள மோதல் இந்தியாவிற்கு ஏற்றுமதி, இறக்குமதி ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.



வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்களே. மொத்தமாக வளைகுடா நாடுகளில் 89 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் இந்தியர்கள் பெரிய தொழில் நிறுவனங்களையும், உணவகங்ளையும் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் வளைகுடா நாடுகளுக்கிடையேயான உறவில் ஏற்படும் விரிசல், இவர்களது தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்தியாவிற்கு பணம் அனுப்புவது வழக்கமான ஒன்று. இந்த வகையில் ஆண்டுதோறும் 6 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு பணம் இந்தியாவிற்குள் வருகிறது. இந்த தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் வளைகுடா நாடுகளில் இருந்து மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியா தமக்கான கச்சா எண்ணெய் தேவையில், பெருமளவு வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ளது. இந்தியாவின் ஒரு நாளுக்கான பெட்ரோலிய பொருட்களின் தேவையில், 60 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்தே பெறப்படுகிறது. குறிப்பாக ஈராக், சவுதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டுமே 50 சதவீத பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா போன்ற பெட்ரோலிய பொருட்களை சார்ந்து இயங்கும் நாடு, வளைகுடா நாடுகளுடனான தனது உறவை சுமுகமாக வைத்திருப்பது அவசியமாகிறது என்பதே வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

வளைகுடா நாடுகளுக்கும் இந்தியாவின் உறவு தேவையாகவே உள்ளது. 2021- 22ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான வர்த்தக மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்துள்ளது. 2026ம் ஆண்டிற்குள் 7 லட்சம் கோடி அளவிற்கு வர்த்தகம் உயரும் என்ற எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில், இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் ஏற்படும் விரிசல் அனைவருக்கும் பாதகமாகவே அமையும் என்பது பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.



வளைகுடா நாடுகள், தங்களது உணவு பொருள் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கின்றன. அதில் இந்தியாவில் இருந்துதான் பெரும்பாலான உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக அரிசி, மாட்டிறைச்சி, மசாலா பொருட்கள்,பழங்கள்,காய்கறிகள்,சர்க்கரை போன்ற பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு வளைகுடா நாடுகளும் இந்தியாவும், வர்த்தகம் மற்றும் பிற விஷயங்களில் இணைந்து செயல்படும் வேளையில், சுமுகமான உறவு இரு நாடுகளுக்கும் தேவையான ஒன்றாகவே கருதப்படுகிறது.


Next Story