மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார் - உள்துறை மந்திரி அமித்ஷா


மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார் - உள்துறை மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 25 July 2023 7:54 PM IST (Updated: 25 July 2023 9:29 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

டெல்லி,

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. சமவெளி பகுதிகளில் வசிக்கும் மெய்தி சமூகத்தினருக்கும் மலைப்பகுதியில் வசித்து வரும் குக்கி சமூகத்தினர் பெற்றுள்ள பழங்குடியின சமூக அந்தஸ்த்தை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மணிப்பூர் ஐகோர்ட்டு மாநில அரசுக்கு பரிந்துரை அளித்தது.

மெய்தி சமூகத்திற்கும் பழங்குடியின அந்தஸ்த்து கிடைத்தால் தங்களுக்கு கிடைத்துவரும் சலுகைகள் பறிபோகும், மெய்தி சமூகத்தினர் மலைப்பகுதிகளில் நிலங்களை வாங்குவார்கள் என கூறி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின சமூகத்தினர் கடந்த மே3-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

அதேவேளை, மலைப்பகுதிகளில் குகி சமூகத்தை சேர்ந்த சிலரால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயிரிடப்பட்டு அவை மியான்மர் போன்ற அண்டை நாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கையில் மணிப்பூர் அரசு தீவிரம் காட்டியதால் அதை தடுக்க போதைப்பொருள் கடத்தல் கும்பல் போராட்டத்தை வன்முறை களமாக மாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூர் வன்முறையின் இரு சமூகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் போது கடந்த மே 4ம் தேதி ஆண்கள் கும்பலால் குகி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்த நிலையில் இதில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் கடந்த சில நாட்களாக முடங்கியுள்ளன. அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மீண்டும் தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், இது குறித்து மக்களவை, மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் மக்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தெரிவித்துள்ளார். விவாதம் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் உருவாக்கினால் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வரும் நாட்களில் அவையில் அமளியில் ஈடுபடாமல் விவாதத்தில் பங்கேற்கும் பட்சத்தில் மணிப்பூரின் தற்போதைய நிலவரம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story