சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
வழக்கில் இறுதி கட்ட விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது.
மும்பை,
மும்பை மாகிமை சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 2019-ம் ஆண்டு தனது பெற்றோருடன் நடைபாதையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். அதிகாலை 5 மணி அளவில் சிறுமியின் தந்தை கண்விழித்து பார்த்த போது சிறுமி காணாமல் போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இது பற்றி போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான சிறுமியை தேடிவந்தனர்.
இந்தநிலையில் மறுநாள் காணாமல் போன சிறுமி அங்குள்ள கழிமுக பகுதியில் பிணமாக கிடந்தாள். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, கொலை செய்த ஆசாமியை பிடிக்க அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், அதே நடைபாதையில் வசித்து வந்த ஆசாமி ஒருவர் தான் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததும், பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடலை கழிமுகத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மும்பை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய சிறப்பு கோர்ட்டு நீதிபதி, சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, கொலை செய்த ஆசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.