திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்தை வீடியோ எடுத்தவர் கைது


திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்தை வீடியோ எடுத்தவர் கைது
x

கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வீடியோ எடுத்த நபர் கண்டறியப்பட்டார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 7-ந்தேதி தரிசனத்திற்கு வந்த பக்தர் ஒருவர் பலத்த பரிசோதனையும் மீறி கோவிலுக்குள் தனது செல்போனை கொண்டு சென்றார்.

மூலவர் மீதுள்ள ஆனந்த நிலையம் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைக் கண்ட தேவஸ்தான அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பலத்த சோதனையை மீறி அவர் எப்படி கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களின் மெத்தனபோக்கால் இந்த சம்பவம் நடந்ததா? என விசாரணை நடத்தி வந்தனர்.

வீடியோ படம் பிடித்த பக்தர் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பக்தர் ஒருவர் தனது செல்போனில் கோவிலை வீடியோ எடுத்தது பதிவாகி இருந்தது. அவரின் தரிசன டிக்கெட்டில் இருந்த ஆதார் எண்ணை கொண்டு தெலுங்கானாவை சேர்ந்த பக்தரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் செல்போன் எப்படி கொண்டு சென்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story