குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000: 'கிரகலட்சுமி' திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், முதல் நாளே கிரகலட்சுமி திட்டம் உள்பட 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். அதன்படி கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பயனை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பணி தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, 3 பெண்களுக்கு விண்ணப்பத்தை கொடுத்து இந்த பணியை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
நாட்டிலேயே முதல் முறையாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கர்நாடகத்தில் அமல்படுத்தி உள்ளோம். ஆனால் இந்த கிரகலட்சுமி திட்டம் குறித்து பா.ஜனதாவினர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அன்ன பாக்ய திட்டம் பிரதமர் மோடியின் திட்டம் என்று பா.ஜனதாவினர் பொய் பேசுகிறார்கள். இது மோடியின் திட்டம் என்றால், பா.ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த திட்டம் ஏன் அமல்படுத்தவில்லை.
கிரகலட்சுமி திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி வழங்குகிறோம். 1.28 கோடி குடும்ப தலைவிகளுக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்கும். இதை பா.ஜனதாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் மாமியார்-மருமகள் என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இவர்களுக்கு மனிதத்துவம் உள்ளதா?. உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவே முடியாது என்று பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூறியது.
ஆனால் நானும், டி.கே.சிவக்குமாரும் சேர்ந்து இதை சாத்தியப்படுத்தியுள்ளோம். பொருளாதார பலம் இல்லாதவர்களுக்கு பணம் கொடுத்தால் ஏற்றத்தாழ்வு நீங்கும். பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தால் நாடு வளர்ச்சி பெறும். பா.ஜனதா எப்போதும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது இல்லை.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
விழாவில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பெண்கள்-குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கர், ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.