வனத்தை விட்டு வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்


வனத்தை விட்டு வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்
x
தினத்தந்தி 19 March 2024 8:41 PM GMT (Updated: 19 March 2024 10:32 PM GMT)

வீட்டு அறையில் ஆட்கள் நிற்பதை பார்த்த ராஜநாகம், மாடிப்படிக்கு அடியில் சென்று பதுங்கியது.

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே கண்டமங்கலம் புற்றானிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹம்சா முசலியார் (வயது 68). இவர் ரம்ஜான் நோன்பு இருந்து வருவதால், நேற்று முன்தினம் மாலை தொழுது கொண்டிருந்தார். அப்போது திறந்து கிடந்த வீட்டிற்குள் ராஜநாகம் புகுந்தது. இதை பார்த்த ஹம்சா முசலியார், வீட்டில் இருந்த குடும்பத்தினரை உஷார்படுத்தினார். மேலும் அவர்கள் பீதி அடைந்தனர்.

பின்னர் வீட்டு அறையில் ஆட்கள் நிற்பதை பார்த்த ராஜநாகம், மாடிப்படிக்கு அடியில் சென்று பதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்காடு வனச்சரகர் அகில் மற்றும் வனத்துறையினர், பாம்பு பிடி வீரர்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் பதுங்கி இருந்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து சிறுவாணி வனப்பகுதிக்குள் ராஜநாகம் விடுவிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் இருந்து ½ கி.மீ. தூரத்தில் உள்ள வீட்டுக்குள் 8 அடி நீளமுள்ள ராஜநாகம் புகுந்தது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வீட்டுக்குள் பாம்பு வந்திருக்கலாம் என்றனர்.


Next Story