காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லை; பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் கடும் தாக்கு


காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லை; பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் கடும் தாக்கு
x

காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லை என பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூருவில் நேற்று முன்னாள் மந்திரியும், பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரி ஆவேன் என்று யாரிடமும் கூறியதில்லை. இனியும் கூறமாட்டேன். நான் முதல்-மந்திரி ஆவேன் என்று கூறி பேனரோ, பிளக்ஸ் போர்டுகளோ எங்கும் வைக்கவில்லை. மேலும் அப்படி செய்தால் மட்டும் முதல்-மந்திரி ஆகிவிட முடியாது. முதலில் ஒருவர் எம்.எல்.ஏ. ஆக வேண்டும்.

பின்னர் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து கட்சி தலைவரின் வழிப்படி முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை கவர்னரிடம் தெரிவித்து அவர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இப்படி பல்வேறு சிக்கல்கள் உள்ளன. நான் முதல்-மந்திரி ஆகிவிடுவேன் என்று யாராவது ஒருவர் சொன்னால் அவர் முட்டாள் தான்.

காங்கிரஸ் கட்சியினர் சித்தாந்தம் இல்லாமல் பேசி வருகின்றனர். ஆட்சியை தொலைத்துவிட்டு, அதை மற்றவர்கள் பறித்து விட்டதாக பொய் கூறி வருகிறார்கள். மக்கள் அவர்களை கண்டிப்பாக ஆதரிக்க மாட்டார்கள்.

அதை தெரிந்து கொண்டுதான் காங்கிரசார் மக்கள் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் பா.ஜனதா அரசு குறித்து பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதால், அவர்களால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story