ராஜஸ்தானில் ஒருபோதும் அசோக் கெலாட் அரசு அமையாது; பிரதமர் மோடி கணிப்பு
அனைத்து அரசு நியமனங்களிலும், காங்கிரஸ் அரசு ஊழல் செய்துள்ளது. இது உங்களுடைய குழந்தைகளுக்கான அநீதி என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
துங்கார்பூர்,
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதேபோன்று பிரதமர் மோடி துங்கார்பூர் மாவட்டத்தின் சாக்வாரா பகுதியில் நடந்த பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டு இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, மாவ்ஜி மகராஜ் ஜியின் ஆசீர்வாதங்களை பெற்று நான் ஒரு கணிப்பை தைரியத்துடன் இன்று வெளியிடுகிறேன்.
இந்த புனித நிலத்தின் சக்தியிது. அதனால், இந்த எண்ணம் என்னுடைய மனதில் தோன்றியது. மாவ்ஜி மகராஜிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு, இந்த தைரியத்தினை நான் எடுத்து கொள்கிறேன்.
நான் என்ன கூறுகிறேனோ, அதனை ராஜஸ்தான் மக்கள் எழுத வேண்டும். அந்த கணிப்பு என்னவென்றால், ராஜஸ்தானில் ஒருபோதும் அசோக் கெலாட் அரசு அமையாது.
காங்கிரசின் கெட்ட நிர்வாகத்தினால், இளைஞர்களின் கனவுகள் நொறுங்கி போய் விட்டன. அனைத்து அரசு நியமனங்களிலும், காங்கிரஸ் அரசு ஊழல் செய்துள்ளது. இது உங்களுடைய குழந்தைகளுக்கான அநீதி என்று பேசியுள்ளார்.