'இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை' - அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்


இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
x

கோப்புப்படம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் நடவடிக்கை, மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் (வயது 47) சென்னை வீடு, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறை ஆகியவற்றில் மத்திய அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீரென சோதனைகள் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், இரவோடு இரவாக அவரை கைது செய்தது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித்தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அது வருமாறு:-

மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ் தலைவர்):-

தமிழ்நாடு மின்சாரத்துறை மந்திரி செந்தில்பாலாஜியை பின்னிரவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. இது மோடி அரசு, தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக மேற்கொள்கிற அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கை அன்றி வேறில்லை.

எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள் யாரும் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளால் பயந்து விட மாட்டோம்.

'பெயரை மாற்றுங்கள்'

அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சித்தலைவர்):-

சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறை இயக்குனரகமும் பா.ஜ.க.வின் ராணுவம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தியதற்கும், அவர் கைது செய்யப்பட்டதற்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். அவர் கைது செய்யப்பட்ட விதம், கடும் ஆட்சேபத்துக்கு உரியது. அமலாக்கத்துறை இயக்குனரகமும், சி.பி.ஐ.யும் ஊழல்வாதிகள் பின்னால் இனி செல்லப்போவதில்லை. அனைத்து ஊழல்வாதிகளும் பா.ஜ.க.வில் அடைக்கலம் ஆகிறார்கள்.

'முட்டாள்களின் சொர்க்கத்தில் பா.ஜ.க.'

டி.ராஜா (இந்திய கம்யூ. பொதுச்செயலாளர்):-

தலைமைச்செயலகத்துக்குள் அமலாக்கத்துறை இயக்குனரகம் செல்ல முடியும் என்பது கடும் ஆட்சேபத்துக்கு உரியது. இப்படிச்செய்வதின்மூலம் பா.ஜ.க. தமிழ்நாட்டில் வெற்றி பெறலாம் என நினைத்தால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்கள். பா.ஜ.க.வை தமிழ்நாடு அனுமதிக்காது.

உமர் அப்துல்லா (தேசிய மாநாடு கட்சித்தலைவர்):-

தமிழ்நாட்டில் அமைச்சரிடம் அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் நடந்து கொண்ட விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அவருக்கு இதயத்தில் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளது, அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசும், இந்த புலனாய்வு அமைப்புகளும் தங்கள் நடத்தை குறித்து மறு சிந்தனை செய்ய வேண்டும்.

நஜ்மஸ் சாகிப் (மக்கள் ஜனநாயகக்கட்சி செய்தி தொடர்பாளர்):-

மத்திய புலனாய்வு அமைப்புகள் முதலில் காஷ்மீரில் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டன. பின்னர் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அமலாக்கத்துறை சோதனை என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மராட்டியம், கர்நாடகத்திலும் நடக்கிறது. மத்திய அரசு தனது நிறுவனங்களுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story