உரிய முக்கியத்துவம் அளிக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி - மம்தா பானர்ஜி


உரிய முக்கியத்துவம் அளிக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி - மம்தா பானர்ஜி
x

Image Courtacy: PTI

கட்சி நிர்வாகிகளுடன் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் காங்கிரசுக்கு 2 தொகுதிகள் மட்டுமே வழங்க திரிணாமுல் காங்கிரஸ் முன்வந்தது. ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதனால் கூட்டணியில் சலசலப்பு நீடிக்கிறது.

இந்த நிலையில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது மாநிலத்தில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துமாறு கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டார். மேலும் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காவிட்டால், அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளில் திரிணாமுல் காங்கிரசும் ஒன்று. ஆனால் மேற்கு வங்காளத்தில் எங்களை தவிர்த்து இடதுசாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தால் நாங்கள் எங்கள் சொந்த பாதையை தேர்ந்தெடுப்போம். எனவே 42 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தயாராக இருக்குமாறு மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார்' என்று தெரிவித்தார்.


Next Story