கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் கைது


கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் கைது
x

கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வக்தனம் பகுதியில் தனியார் கான்கிரீட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கான்கிரீட் கலவை எந்திர ஆப்பரேட்டராக தமிழ்நாட்டை சேர்ந்த பாண்டித்துரை (வயது 29) என்ற இளைஞர் செயல்பட்டு வருகிறார். அதேபோல், இந்த ஆலையில் அசாம் மாநிலத்தை லைமென் கிஸ்க் (வயது 19) என்ற இளைஞரும் வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த 28ம் தேதி லைமென் கிஸ்க் கான்கிரீட் கலவை எந்திரத்திற்குள் இறங்கி அதை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது, லைமென் கலவை எந்திரத்திற்குள் இருப்பதை கவனிக்காத பாண்டித்துரை எந்திரத்தை இயக்கியுள்ளார்.

இதில், லைமென் உடல்நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து, லைமெனின் உடலை கலவை எந்திரத்தில் இருந்து மற்றொரு எந்திரம் மூலம் எடுத்த பாண்டித்துரை உடலை குப்பையில் வீசியுள்ளார். பின்னர் லைமெனின் உடல் வீசப்பட்ட பகுதியில் கான்கிரீட் கலவையை கொட்டியுள்ளார்.

ஆனால், உயிரிழந்த லைமெனின் உடலை சக ஊழியர்கள் 2 நாட்கள் கழித்து கண்டுபிடித்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, கலவை எந்திரத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த லைமென் கிஸ்கை கவனிக்காமல் ஆப்பரேட்டர் பாண்டித்துரை எந்திரத்தை இயக்கியது தெரியவந்தது. மேலும், லைமெனின் உடலை யாருக்கும் தெரியாமல் குப்பையில் வீசி அதன்மீது கான்கிரீட்டை கொட்டியதும் தெரியவந்தது. மேலும், போலீசார் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஆலையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அழிக்க பாண்டித்துரை முயற்சித்துள்ளார். இதையடுத்து, பாண்டித்துரையை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


Next Story