திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு கருட சேவை


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு கருட சேவை
x
தினத்தந்தி 19 Oct 2023 10:34 AM GMT (Updated: 19 Oct 2023 11:56 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு கருட சேவை நடைபெறுகிறது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின்போது, நேற்று இரவு சர்வ பூபால வாகனத்திலும், 5-வது நாளான இன்று காலை மோகினி அவதாரத்திலும் மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் உலா வந்தார். ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம்.

இன்று மாலை 6.30 மணிக்கு சூரிய அஸ்தமனம் முடிந்தவுடன் வழக்கத்திற்கு மாறாக 30 நிமிடத்துக்கு முன்னதாக 6.30 மணிக்கு ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார். கருட சேவை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் இன்று அதிகாலை முதலே 4 மாட வீதிகளில் காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 68,763 பேர் தரிசனம் செய்தனர். 28,377 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 2.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேற்று நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று காலை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இலவச தரிசனத்தில் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 4 அறைகளில் மட்டுமே பக்தர்கள் உள்ளனர். இதனால் சுமார் 5 மணி முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story