சம்மேளன தலைவரை கைது செய்ய வலியுறுத்தி 2-வது நாளாக நீடித்த மல்யுத்த வீரர்களின் போராட்டம்


சம்மேளன தலைவரை கைது செய்ய வலியுறுத்தி 2-வது நாளாக நீடித்த மல்யுத்த வீரர்களின் போராட்டம்
x

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் 3 நாள் போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை முடிவில் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியை அமைத்தது. கமிட்டி விசாரித்து அதன் அறிக்கையை கடந்த 5-ந்தேதி மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்ற விவரத்தை விளையாட்டு அமைச்சகம் இன்னும் வெளியிடாமல் மவுனம் காக்கிறது.

இந்த நிலையில், டெல்லி சி.பி. போலீஸ் நிலையத்தில் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் அளித்துள்ள பாலியல் புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மேரிகோம் தலைமையிலான விசாரணை கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போர்க்கொடி தூக்கியுள்ள இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று முன்தினம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

வழக்கு பதிவு செய்யுங்கள்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இந்த முறை நீதி கிடைக்கும் வரை போராடுவோம், அந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று அவர்கள் சூளுரைத்துள்ளனர். போராட்ட களத்திலேயே படுத்து தூங்கிய அவர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

வினேஷ் போகத், சாக்ஷி, பூனியா ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில், 'இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் எங்களது கவனம் இல்லை. பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரிஜ் பூஷனுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து இந்த விவகாரம் குறித்த முழுமையாக விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம். வெற்றி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது. பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர் யாரையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. வழக்குப் பதிவு செய்யாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்' என்றனர்.

ஒலிம்பிக் சங்கம் ஆலோசனை

இதற்கிடையே மே 7-ந்தேதி நடக்க இருந்த இந்திய மல்யுத்த நிர்வாகிகள் தேர்தலை நிறுத்தி வைத்த மத்திய விளையாட்டு அமைச்சகம், அது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், இடைக்கால கமிட்டியை அமைத்து 45 நாட்களுக்குள் மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை நடத்தும்படியும் அதுவரை சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குகுழு கூட்டம் வருகிற 27-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.


Next Story