பெங்களூருவில் டோயிங் நடைமுறை மீண்டும் அமல்?
பெங்களூருவில் டோயிங் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் டோயிங் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
டோயிங் நடைமுறை ரத்து
பெங்களூருவில் உள்ள சாலைகளில் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தினால், அந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுவதுடன், அந்த வாகனம், டோயிங் செய்து தூக்கி செல்லப்படும். இந்த நடைமுறைக்கு பெங்களூரு நகரவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், வாகனங்களை டோயிங் செய்யும் நடைமுறையை அரசு ரத்து செய்திருந்தது.
இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், பெங்களூருவில் வாகனங்களை டோயிங் செய்வதற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் 6 வாரங்களில் முடிவு எடுத்து அரசு அறிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-
மக்கள் ஆதங்கப்பட வேண்டாம்
பெங்களூருவில் மீண்டும் வாகனங்களை டோயிங் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருவது பற்றி எனது கவனத்திற்கும் வந்தது. டோயிங் நடைமுறையால் மக்கள் ஆதங்கத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மையில் பெங்களூருவில் டோயிங் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. இதனால் மக்கள் ஆதங்கப்பட வேண்டாம். டோயிங்களால் மக்களுக்கு ஏற்பட்ட தொந்தரவு, மக்கள் அளித்த புகார்களால் தான், டோயிங் நடைமுறையை அரசு ரத்து செய்திருந்தது.
எனவே மீண்டும் டோயிங் நடைமுறைகள் பெங்களூருவில் கொண்டு வரப்படாது. இதுபற்றி முதல்-மந்திரியுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. பெங்களூருவில் பாதுகாப்பான முறையில் வாகனங்களை நிறுத்துவது, பாதுகாப்பான முறையில் மக்கள் வாகனங்களில் பயணம் மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
டோயிங்க்கு மாற்றாக என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அதுபற்றி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.