போக்குவரத்து விதிமீறிய அரசியல் கட்சியினர்; 4.12 லட்சம் பேர் மீது வழக்கு
பெங்களூருவில் கடந்த 25 நாட்களில் தேர்தல் பிரசாரத்தின் போது போக்குவரத்து விதிமீறிய அரசியல் கட்சியினர் 4.12 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.22¾ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் கடந்த 25 நாட்களில் தேர்தல் பிரசாரத்தின் போது போக்குவரத்து விதிமீறிய அரசியல் கட்சியினர் 4.12 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.22¾ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பலரும் கார்களில் பிரசாரம் செய்தனர். மோட்டார் சைக்கிள், வாகன பேரணி நடத்தினர்.
அப்போது பெங்களூரு மாநகரில் மட்டும் பலரும் ஹெல்மெட் அணியாமலும், செல்போனில் பேசியபடியும், சிக்னலில் நிற்காமல் சென்றது, ஜீப்ரா கோடுகளை தாண்டியது உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டனர். தேர்தல் பணியில் ஈடுபட்டதால் போலீசாரும் சிக்னல்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் குறைவாக ஈடுபட்டு வந்தனர்.
4.12 லட்சம் பேர் விதிமீறினர்
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அரசியல் கட்சியினர் சகட்டுமேனிக்கு போக்குவரத்து விதிகளை மீறியது போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
இந்த கேமரா காட்சிகளின் அடிப்படையில் பெங்களூரு போக்குவரத்து விதிகளை மீறிய அரசியல் கட்சியினரை வாகன பதிவு எண் மூலம் கண்டறிந்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகிறார்கள். இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை கடந்த 25 நாட்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட 4 லட்சத்து 12 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர்களுக்கு ரூ.22 ேகாடியே 89 லட்சம் அபராதத்தை போலீசார் விதித்துள்ளனர்.
விதிமீறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.
இந்த அபராதத் தொகையை போலீசார் வசூல் பண்ண தொடங்கியுள்ளனர். வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு புகைப்பட ஆதாரத்துடன் போக்குவரத்து விதிமீறல் குறித்து தகவல் அனுப்பி அபராதம் விதித்து வருகிறார்கள்.
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், போக்குவரத்து விதிமீறியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு சிக்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான உதய் கருடாச்சார் தேர்தல் பிரசாரத்தின் போது இருசக்கர வாகன பேரணி நடத்தினார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்றார். இதற்காக அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். அவர் பயணம் செய்த கே.ஏ. 05 கே.டி. 223 என்ற இருசக்கர வாகனத்திற்கு மொத்தம் ரூ.11,500 அபராதம் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டறியும் வகையில் செயற்கை நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் கீழ் 250 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் மத்திய அரசின் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலமும் போலீசார் வாகனங்களில் விதிமீறுவோரை கண்டறிந்து அபராதம் விதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.