டெல்லியில் சோகம்: முடிச்சு போடுவது பற்றி ஆன்லைனில் தேடல்... மனைவி, மகள் கொலை; கணவர் தற்கொலை
டெல்லியில், முடிச்சு போடுவது எப்படி? என ஆன்லைனில் தேடி, தெரிந்து மனைவி, மகளை கொலை செய்த கணவர் தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் ஷாதரா மாவட்டத்தில் ஜோதி நகர் பகுதியில் மனைவி, 13 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் வசித்து வந்தவர் சுஷில் (வயது 43).
இவர் கிழக்கு வினோத் நகர் பகுதியில் உள்ள டி.எம்.ஆர்.சி.யில் பராமரிப்பு மேற்பார்வையாளர் பணியில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில், சுஷிலின் சக பணியாளரிடம் இருந்து போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்து உள்ளது.
அதில் பேசிய அந்த நபர், சுஷில் என்னை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கொன்று விட்டேன் என கூறினார். அவரிடம் மீண்டும் பேச முற்பட்டபோது அவர், அழைப்பை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
இதனால் உஷாரான போலீசார் உடனடியாக அழைப்பு வந்த பகுதியை ஆய்வு செய்து, சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். எனினும், அந்த பகுதியில் 3 உடல்கள் கிடந்துள்ளன. சுஷில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவரது மனைவி, மகள் கத்தியால் குத்தப்பட்டு, காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர். இந்த சம்பவத்தில் மகனையும் சுஷில் கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும், போலீசார் வந்தபோது உயிருடன் இருந்த சுஷிலின் மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முதல்கட்ட விசாரணையில் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு, சுஷில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். தடய அறிவியல் ஆய்வக குழுவினரும் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில், தூக்கு போடுவதற்கு முன்பு முடிச்சு போடுவது எப்படி? என்று ஆன்லைனில் தேடி, அதன் விவரங்களை சுஷில் தெரிந்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.