ரெயில் விபத்து: அயராது உழைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரையும் பாராட்டுகிறேன் - பிரதமர் மோடி
மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொருவரின் அர்ப்பணிப்புக்கும் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. முன்னதாக சென்னை நோக்கி வந்த ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இது அருகில் உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் கோரமண்டல் எக்ஸ்பிரசின் பின்பக்க வண்டி மூன்றாவது பாதையில் தடம் புரண்டது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மூன்றாவது பாதையில் எதிர் திசையில் இருந்து, தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொருவரின் அர்ப்பணிப்புக்கும் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் உண்மையிலேயே ஊக்கமளிப்பவை. ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்தவுடன், மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஏராளமானோர் ரத்ததானம் செய்ய வரிசையில் நின்றனர்.
ரயில்வே, NDRF, ODRAF, உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு சேவை, தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பலர் அயராது உழைத்து மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொரு நபரையும் நான் பாராட்டுகிறேன். தங்களின் அர்ப்பணிப்புக்கு பெருமைப்படுகிறேன்.
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது. தங்களின் அன்பான வார்த்தைகள், துயருற்றிருக்கும் குடும்பங்களுக்கு வலிமை தரும். தங்களின் ஆதரவுக்கு நன்றி" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.