ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்; பயணிகள் கருத்து


ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்; பயணிகள் கருத்து
x

ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு:

ரெயில் பயணம் ஒரு சுகமான அனுபவமாகும். அலுப்பு இருக்காது. பாதுகாப்பானது. கட்டணம் குறைவு. எனவே உள்ளூர் வாசிகள் மட்டும் அல்ல, வெளி மாநிலத்தவர்களும் முதலில் தேர்வு செய்வது ரெயில் பயணத்தைத்தான்.

பஸ்களில் பல சோதனைகளுக்கு இடையே பயணம் செய்ய பெரும்பாலான பயணிகள் விரும்புவது இல்லை.

அதே நேரத்தில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வது சாதாரண காரியமல்ல. 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்றாலும் குறிப்பிட்ட சில ரெயில்களில் இடம் கிடைப்பது இல்லை.

பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் ரெயில் டிக்கெட்டுகள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.

சாத்தியம் இல்லை

அவசரமாக பயணம் செய்பவர்கள் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறைகளை நாடிச்செல்கிறார்கள். ஆனால் அவை சாதாரண மக்களுக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமாவது இல்லை.

எனவே சாதாரண மக்கள் பயணம் செய்யும் வகையில் ரெயில்களில் வசதிகளை மேம்படுத்துவதுடன் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிப்பதே நல்ல தீர்வாக இருக்க முடியும்.

இதுபற்றி பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்

சிவமொக்கா வினோபா நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் எம்.பி.சம்பத் கூறுகையில், "இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் ஊர்களையும் இணைக்கும் போக்குவரத்து, ரெயில் மட்டுமே. வசதியற்றவர், வயதானவர்கள், நோயாளிகள் பயணிக்க விரும்புவது ெரயிலில் மட்டுமே. ஆனால் ெரயில்வே துறை, வியாபாரத் துறையாகி சிறப்பு முன் பதிவு, கூடுதல் கட்டணம், குளிர் சாதன பெட்டிகள், தட்கல், பிரிமீயம் தட்கல் போன்றவற்றை அதிகமாக்கி வருகிறது. அவசர தேவைக்காக சொந்த ஊர் மற்றும் வெளியூர், வெளிமாநிலம் செல்ல விரும்புவோர் ரெயிலில் பயணிக்க முடியாத நிலை தற்போது உள்ளது. ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் 2 அல்லது 4 பெட்டிகளை மட்டுமே உள்ளது. அதில் கட்டுப்பாடு இல்லாமல் மக்களை ஏற்றுகிறார்கள். இதனால் பொதுப்பெட்டிகளில் நின்று கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

சிவமொக்காவில் இருந்து பெங்களூரு செல்லும் இரவு ரெயிலில் 22 பெட்டிகளில் 18 பெட்டிகள் முன் பதிவு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாகவும், ஏசி பெட்டிகளாகவும் உள்ளன. மேலும் இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு பெட்டிகளாக வசதி வாய்ப்பு உள்ள பணக்காரர்களும் செல்லும் ெரயிலாகவும் அந்த ரெயில் இருக்கிறது. இதனால் அவசர தேவைக்காக செல்வோர், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க முடியாத நிலை உள்ளது.

60 வயதை கடந்த வயதானவர்களுக்கு இருந்த கட்டண சலுகையை இப்போது ரெயில்வே நிர்வாகம் வழங்கவில்லை. வங்கியில் கொடுத்த வாராக்கடன்கள் பல கோடி ரூபாய் தள்ளுபடி செய்யும்போது ஏழை எளியவர்களுக்கு லாப நோக்கம் இல்லாமல் கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டி இணைப்பதுடன், சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை குறைக்க கூடாது" என்றார்.

ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய...

சிக்கமகளூரு டவுன் மார்க்கெட் ரோட்டில் பாத்திர வியாபாரம் செய்து வரும் சித்தநாதன் கூறுகையில், "தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் உடுமலை எனது சொந்த ஊர். நான் இங்கு 30 ஆண்டுகளாக பாத்திர வியாபாரம் செய்து வருகிறேன். எனது குடும்பம் உடுமலையில் வசிக்கிறது. இதனால் நான் 3 நாட்கள் மட்டுமே சிக்கமகளூரு வந்து வியாபாரம் செய்துவிட்டு ஊருக்கு சென்றுவிடுவேன். ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் தான் பெங்களூருவுக்கு சென்று அங்கிருந்தும் ரெயிலில் உடுமலைக்கும் செல்கிறேன். பொதுவாக 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் தான் ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

அவசர வேலையாக ஊருக்கு செல்லும் சமயத்தில் முன்பதிவு இல்லாத பெட்டியில் செல்வதால் சில சமயங்களில் இருக்கை கிடைப்பதில்லை. கழிவறை பகுதியில் நின்று செல்லும் நிலை தான் உள்ளது. கொரோனா காலத்தில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை இருந்தது. தற்போது அந்த நடைமுறை இல்லை. ரெயில் நிலையத்தில் தான் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டியது உள்ளது. எனவே, முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், ஆன்லைனில் முன்பதிவு இல்லாத டிக்கெட் பதிவு செய்யவும் மத்திய அரசும், ரெயில்வே அமைச்சகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அனைத்து தரப்பு மக்களும்

கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையைசேர்ந்த கதிரவன் கூறுகையில், "ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர், வெளிநாட்டினர் என்ற பாகுபாடு இல்லாமல் மக்களை நடத்தி வந்தனர். சுதந்திரத்திற்கு பின் பணம் ஈட்டுவதிலேயே மத்திய, மாநில அரசுகள் குறியாக உள்ளன. ஏழை எளிய மக்களின் ரதம் என்பது ரெயில்தான். ஆனால் இன்று வணிக நோக்கில் கட்டண உயர்வு, சாதாரண படுக்கை பெட்டி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கையில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதுபோல் பாசஞ்சர் ரெயிலை சிறப்பு ரெயிலாக மாற்றி கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பொது போக்குவரத்தாக இருந்த ரெயில்கள் இன்று வசதி படைத்தவர்களுக்காக மட்டுமே இயக்கும் நிலை உள்ளது. வருவாயை ஈட்டும் நோக்கத்துடன் சாதாரண ரெயில்களையும் எக்ஸ்பிரஸ் ரெயில் என்று அறிவித்து அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். வயதானவர்கள் ஆன்மிக சுற்றுலா செல்ல சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை பயன்படுத்தினர். ஆனால் சாதாரண படுக்கை வசதி பெட்டி குறைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே ரெயில்வே நிர்வாகம் வணிக நோக்கத்துடன் செயல்படுவதை கைவிட்டு அனைத்து தரப்பு மக்களும் ரெயில் பயணம் மேற்கொள்ளும் வகையில் தனது சேவையை மேம்படுத்த வேண்டும்" என்றார்.

முன்பதிவு செய்ய தெரிவதில்லை

பெங்களூரு கோரமங்களாவை சேர்ந்த சண்முகம் கூறுகையில், "பஸ்களில் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் தான் ரெயிலில் பயணம் செய்ய ஏழை மக்கள் விரும்புகிறார்கள்.ஆனால் ஏழைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்வது பற்றி பெரிதாக தெரிவதில்லை. டிக்கெட் முன்பதிவு செய்யும்படி யாரையும் ஏழை மக்கள் நாடுவதில்லை. தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு செல்லும் ரெயில் வந்தால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏறி பயணிப்பது தான் வழக்கம்.

எனவே ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக இணைத்தால் பயன் உள்ளதாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் பயணிக்கவும் முடியும். அப்படி பயணம் செய்பவர்கள் சொகுசாக செல்வதில்லை. தூங்காமல் கண்விழித்தே பயணிக்கிறார்கள் என்பதை ரெயில்வே நிாவாகம் புரிந்து கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வசதிக்கேற்ப ஏழை மக்களையும் ரெயில்வே நிர்வாகம் கவனத்தில் கொண்டால், சிறப்பாக இருக்கும்" என்றார்.

தொலைதூர ரெயில்களில்...

பெங்களூரு மாரத்தஹள்ளியில் வசிக்கும் சந்தோஷ் கூறுகையில், "பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் எப்போதும் டிக்கெட் இருப்பதில்லை. அவசர தேவைக்காக செல்லும் போதும் சரி, பண்டிகை நாட்களில் செல்லும் போதும் சரி முன்பதிவு இல்லாத பெட்டிகள் 3 மட்டுமே உள்ளது. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத 2 பொது பெட்டிகள் தான் இருக்கிறது. அதில் சில நேரங்களில் நின்று கொண்டே பயணிக்க வேண்டும். இளைஞர்களுக்கு பிரச்சினை இல்லை. பெண்கள், வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தொலைதூரம் செல்லும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகளை இணைக்கலாம். இது அவசரமாக பயணிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்" என்றார்.


Next Story