கர்நாடகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்
கர்நாடகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராக தமிழ்நாட்டில் உள்ள மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான திவ்யா பிரபு நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராக தமிழ்நாட்டில் உள்ள மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான திவ்யா பிரபு நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சித்ரதுர்கா கலெக்டர்
கர்நாடக அரசு 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக உணவு வினியோக கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த திவ்யா பிரபு, சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் கபில் மோகன் சுற்றுலாத்துறைக்கும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் அனில்குமார் வருவாய்த்துறை முதன்மை செயலாளராகவும், மைசூரு மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் கனிம வளத்துறை இயக்குனராகவும், கன்னட வளர்ச்சித்துறை இயக்குனர் ஜானகி, சகாலா திட்ட கூடுதல் திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரகுநந்தன் மூர்த்தி
மண்டியா மாவட்ட கலெக்டர் அஸ்வதி கால்நடைத்துறை கமிஷனராகவும், வணிக வரித்துறை கூடுதல் கமிஷனர் ரகுநந்தன் மூர்த்தி ஹாவேரி மாவட்ட கலெக்டராகவும், பல்லாரி உதவி கலெக்டர் ஆகாஷ், குடகு மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஹட்டி தங்க சுரங்க நிர்வாக இயக்குனர் பிரபுலிங்க கவலிகட்டி உத்தர கன்னடா மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி இடமாற்றத்தில் திவ்யா பிரபு மற்றும் முல்லை முகிலன் ஆகியோர் தமிழர்கள் ஆவார்கள். திவ்யா பிரபு தமிழ்நாடு மதுரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.