பல்லாரி சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் வெட்டப்படுவதா?; இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
பல்லாரி சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் வெட்டப்படுவதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு-பல்லாரி சாலையில் காவிரி தியேட்டர் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மேலும், அவர்கள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்லாரி சாலையில் அரண்மனையின் 4-வது முதல் 9-வது நுழைவு வாயில் வரை 6 வழி சாலையாக மாற்ற முடிவு செய்தனர்.
இதற்கான திட்ட பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் தொடங்க உள்ளனர். இந்த சாலையின் இருபுறங்களிலும் 3 மீட்டர் அகலப்படுத்தும்போது, சுமார் 58 மரங்கள் வெட்டப்படும் என கூறப்படுகிறது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தன்னார்வ அமைப்பினர் கூறுகையில், 'பெங்களூருவில் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. மரங்கள் வெட்டப்படுவதை அனுமதிக்க முடியாது. போக்கவரத்து நெரிசலை தடுக்க மாற்று வழிகளை மாநகராட்சி எடுக்க வேண்டும்' என்றனர்.