திரிபுரா சட்டசபை தேர்தல்; சாதனை அளவாக வாக்களிக்க வரவேண்டும்: மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு


திரிபுரா சட்டசபை தேர்தல்; சாதனை அளவாக வாக்களிக்க வரவேண்டும்:  மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
x

திரிபுரா சட்டசபை தேர்தலில் மக்கள் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருகை தந்து, ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டு உள்ளார்.


அகர்தலா,


வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுராவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் வருகிற மார்ச் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிபுராவில் அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் நம்பிக்கையுடன் உள்ளது. மொத்தமுள்ள 28.14 லட்சம் வாக்காளர்களில் 14.15 லட்சம் பேர் ஆண்கள். 13.99 லட்சம் பேர் பெண்கள். 62 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு 259 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக மக்கள் ஆர்வமுடன் கடும் குளிரையும் கவனத்தில் கொள்ளாமல் காலையிலேயே வாக்களிக்க வருகை தந்து கொண்டுள்ளனர்.

இந்த தேர்தலில் சாதனை ஏற்படுத்தும் வகையில் வாக்களிக்க வரும்படி பிரதமர் மோடி, மக்களை கேட்டு கொண்டு உள்ளார். இதுபற்றி அவர் இன்று காலை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், திரிபுரா மக்கள் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருகை தந்து, ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

தேர்தலில், தங்களது கடமையை நிறைவேற்ற வரும்படி இளைஞர்களை தனிப்பட்ட முறையில் கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.



Next Story