மராட்டியத்தில் கார் மீது லாரி மோதி விபத்து : 6 பேர் பலி
லாரி டிரைவரை கைது செய்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாக்பூர்,
மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரின், கடோல்-கல்மேஷ்வர் புறநகர் சாலையில் உள்ள சோன்காம்ப் கிராமத்திற்கு அருகே நேற்று நள்ளிரவில் 7 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். அதே சாலையின் மறுபுறத்தில் சோயாபீனை ஏற்றி லாரி ஒன்று வந்துகொண்டிருந்து. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மூன்று பேர் மேல்சிகிச்சைக்காக நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செயதுள்ளனர். மேலும் லாரி டிரைவரை கைது செய்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.