மாநகராட்சி தீவிபத்து குறித்து வருகிற 15-ந் தேதி அறிக்கை தாக்கல்; தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி


மாநகராட்சி தீவிபத்து குறித்து வருகிற 15-ந் தேதி அறிக்கை தாக்கல்; தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி
x
தினத்தந்தி 2 Sep 2023 6:45 PM GMT (Updated: 2 Sep 2023 6:46 PM GMT)

தீக்காயம் அடைந்து பலியான தலைமை என்ஜினீயரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், தீ விபத்து குறித்து வருகிற 15-ந் தேதி அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

தீக்காயம் அடைந்து பலியான தலைமை என்ஜினீயரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், தீ விபத்து குறித்து வருகிற 15-ந் தேதி அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மனைவிக்கு அரசு வேலை

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்த தீ விபத்தில் தீக்காயம் அடைந்திருந்த தலைமை என்ஜினீயர் சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், சிவக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கும்படி கோரியும் அரசுக்கு, மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது.

எனவே சிவக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்கும். அவரது குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும் வழங்கப்படும். மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த தீ விபத்து குறித்து கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதியே அரசிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வது தள்ளிப்போய் உள்ளது.

15-ந் தேதி அறிக்கை தாக்கல்

ஏனெனில் சில தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒருசில தகவல்களை கேட்டுள்ளோம். அந்த நிறுவனங்கள் இன்னும் தகவல் அளிக்காத காரணத்தால், மாநகராட்சி தீ விபத்து தொடர்பான விசாரணையை முழுமையாக முடித்து, வருகிற 15-ந் தேதி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. பெங்களூருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், சாலைகளில் பள்ளம் ஏற்பட்டும் பிரச்சினைகள் உருவாகி இருக்கிறது.

மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரி செய்யப்படும். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மழை பாதிப்புகளை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து மக்கள் புகார் அளிக்கவும், தேவையான உதவிகளை வழங்கவும் மாநகராட்சி சார்பில் 24 மணிநேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story